திருச்சி சரக டிஐஜியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே வருண்குமார், ‘தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டு வந்தனர் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக சீமான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்குத் தடை விதிக்கவும் கோரி சீமான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி டி.ஐ.ஜி. ஆக இருந்தவரும், சென்னையில் சிபிசிஐடி பிரிவின் டிஐஜியாக பணியில் தொடரும் வருண்குமார், சீமானுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி எல். விக்டோரிய கெளரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2025ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வருண் குமார் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (02.04. 2026) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர் மனுதாரரான சீமான் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டனர். இந்த வழக்கில் வருண் குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் நினா ஆர். நாரிமன், கௌரவ் சவுத்ரி மற்றும் ரமேஷ்வர் பிரசாத் கோயல் ஆகியோர் ஆஜராகினர்
