சீமான் யாரென்று கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை: அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சுக்கு மாரிதாஸ் கடும் பதிலடி – maridhas responds tvk minister vijay balaji remarks regarding ntk seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலில் இதுவரை வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசியல் களத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இப்படியான நிலையில் தவெக அமைச்சர் விஜய் பாலாஜி , சீமான்னா யாரு என கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக பலரும் சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப்பர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

தவெக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் நடக்கும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து நாதக சீமான் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார். அந்த வகையில் சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக காட்டமான விமர்சனங்களை முன்வைத்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் தவெக அமைச்சர் விஜய் பாலாஜியிடம், சீமான் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீமான்னா யாருணா? என்று அலட்சியமாக பதிலளித்தார். அதோடு மக்கள் பிரச்சனை பற்றி எம்எல்ஏ, எம்பி பொறுப்புகளில் இருப்பவர்கள் கேள்வி எழுப்பினார் பதில் சொல்லலாம். ஆனால் ஒருமுறை கூட ஜெயிக்காத சீமான் யார்? அவருடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்து இருந்தார். அமைச்சர் விஜய் பாலாஜியின் இந்த பேச்சுக்கு நாதக கட்சியை சார்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் யூடியூப்பரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவதை நான் கல்லூரி முடிந்த காலம் முதல் அறிவேன். பின்னாட்களில் ஈழத்து போர் காலத்தில் தமிழ்நாட்டில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தார் என்று நியாபகம். ஒரு முறை அண்ணா கசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மதுரையில் இருபது நாட்களுக்கு மேலாக நான் முன்னின்று நடத்தி கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பள்ளி சிறுவன் அருகில் வந்து, 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணன் போராட்டம் செய்கிறார். நீங்களும் உங்கள் குழுவுடன் இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட சீமான் யாரென்று தெரியும். நீ என்ன பண்ணிட்டு இருந்த? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா” என்று சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திரிந்து இருப்ப. அப்படி இருக்கையில் உனக்கு எப்படி அவரை தெரியும் என கடும் விமர்சனங்களை மாரிதாஸ் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து அவரின் பதிவில், சித்தாந்தம் தொடர்பான சண்டை உண்டு. கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால் களத்தில் அவர் யாரென்று கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு முதலில் பிளாக் டிக்கெட் விற்று, திடீரென்று அதிர்ஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு சென்றவர்கள் சீமான் யாரென்று கேட்க தகுதி இல்லவே இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மாரிதாஸ்.

மேலும் நாடு, மக்கள், பொருளாதாரம், சித்தாந்தம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியேட்டர் பக்கமாக திரிந்தவர்கள் அமைச்சரானால், யார் அவர் என கேட்க தானே செய்வீர். எல்லாம் இந்த மக்களை சொல்ல வேண்டும் எனவும் அவருடைய பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாதகவை சார்ந்த துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் அமைச்சர் விஜய் பாலாஜியின் பேச்சுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link