தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு வேட்பாளர்களின் சொத்து சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் லீமா ரோஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி லீமா ரோஸ் குடும்ப சொத்து மதிப்பு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக லீமா ரோஸுக்கு அசையும் சொத்தாக 139.62 கோடியும், அசையா சொத்தாக 909.94 கோடியும் என மொத்தம் ரூ. 1048 கோடி மதிப்பிலான சொத்துக்கள் லீமா ரோஸ் உள்ளது. அவரது கணவர் மார்ட்டின் பெயரில் அசையும் சொத்துக்களாக 3 ஆயிரத்து 262 கோடியும் அசையா சொத்துக்களாக 877 கோடியும் உள்ளது. அந்த வகையில் மொத்தம் 4000 கோடி மதிப்பிலான சொத்துக்களானது லீமா ரோஸின் கணவரான மார்ட்டின் பெயர் உள்ளது.
இத்தம்பதியரின் மகளான டைசினா மார்டின் பெயரில் அசையும் சொத்துக்களாக 225 கோடியும், அசையா சொத்துக்களாக 439 கோடியும் உள்ளது. அதன்படி இவருக்கு சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் குடும்ப சொத்து மதிப்பாக மொத்தம் 5 ஆயிரத்து 987 கோடி ரூபாய் உள்ளதாக லீமா ரோஸ் தன்னுடைய உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ் மார்ட்டினுக்கு, அக்கட்சியின் மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
