சுயசார்பா; அமெரிக்க சார்பா? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

”அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்து விட்டு, ‘மத்தியில் உள்ளது பலமான அரசா அல்லது பலவீனமான அரசா’ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்து விட்டது.

”இதனால், சுயசார்பு இந்தியாவா; அமெரிக்க சார்பு இந்தியாவா என்ற கேள்வி எழுந்துள்ளது,” என, காங்., – எம்.பி., ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று, காங்., – எம்.பி.,யும், அக்கட் சியின் செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம், நம் நாட்டின் விவசாயிகள், நில உரிமையாளர்கள் நலன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இயற்கை வளம் அமெரிக்காவிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்காவிடம் இருந்து, 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அந்நாட்டு பொருட்களை இந்தியா வாங்க வேண்டுமென இந்த ஒப்பந்தம் கூறுகிறது. அப்படியானால், இதை இந்தியாவின் நலனுக்கான ஒப்பந்தம் என, எப்படி கூற முடியும்?

நம் நாட்டின் மிக முக்கிய பொக்கிஷமாக கருதப்படும், ‘டேட்டா ஷேரிங்’ எனப்படும் தரவுகள் பகிர்வு சார்ந்த விஷயங்களில், மத்திய அரசு சமரசம் செய்துள்ளது. தங்களை பலமான அரசு எனக் கூறிக் கொள்கின்றனர்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை பார்த்த பின், மத்தியில் உள்ளது பலமான அரசா அல்லது பலவீனமான அரசா என, மக்கள் கேட்கின்றனர். இதனால் இந்த ஒப்பந்தம், சுயசார்பு இந்தியாவா; அமெரிக்க சார்பு இந்தியாவா கேள்வியை எழுப்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

– நமது டில்லி நிருபர் -:

Source link