சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மைத்ரேயன், அடையாறு காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றபோது மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த ரவுடி மைத்ரேயனைக் கொலை செய்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அடையாறு இந்திரா நகரில் பயங்கரம்!
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடிமைத்ரேயன் என்பவரை மர்மக் கும்பல் வழிமறித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கூரிய ஆயுதங்களுடன் வந்த கும்பல், பட்டப்பகலில் நடுரோட்டில் அந்த வாலிபரைத் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
இந்தக் கொலை விவகாரம் குறித்து தகவல் அறிந்த அடையாறு போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட மைத்ரேயன், மயிலாப்பூரைச் சேர்ந்த சி பிரிவு ரவுடி என்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்த கும்பல் குறித்த தகவல்களைத் திரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே அந்தப் பகுதியில் உள்ளசிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட மைத்ரேயனின் நம்பரை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுள்ளான் மதன் கொலைக்குப் பிறகு மீண்டும் அதே பாணி?
ஏற்கெனவே சிவகங்கை பகுதியில் கொல்லப்பட்ட சுள்ளான் மதனின் கொலையை வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் ரீலாகப் பதிவிட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் கொலை அரங்கேறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனேவே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து பலகட்ட எதிர்ப்பு மன நிலை உருவாகியிருக்கும் சூழலில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் தவெக அரசின் நம்பகத்தன்மையை குறைக்குமா?
