`சுவரொட்டியில் பார்த்தவரை நேரில் சந்தித்தேன்' – அனிஷ்மாவின் நீண்ட கால கனவை நனவாக்கிய சூர்யா!

சிறை படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை அனிஷ்மா. சிறைப் பட வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் யூத் திரைப்படமும், அதில் இவர் நடித்த கதாப்பாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகை அனிஷ்மா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை எனப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆதர்ச நாயகனை நேரில் சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அனிஷ்மா

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “2005-ஆம் ஆண்டு முதல் என்னை வெட்கப்பட வைத்தவர் சூர்யா. பள்ளிக்குச் செல்லும் முன்பு தினமும் காலையில் ‘சுற்றும் விழிச் சுடரே’ பாடலைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். அவரது சுவரொட்டிகளை என் வீட்டுச் சுவர்களில் ஒட்டி வைத்திருந்தேன். ஒரு சிறந்த நடிகராகவும், நல்ல மனிதராகவும் அவரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். இறுதியாக, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அனிஷ்மாவை அன்புடன் வரவேற்ற சூர்யா, அவரது திரைப்பயணம் மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். சூர்யா போன்ற ஒரு பெரிய நட்சத்திரம், தன்னிடம் காட்டிய எளிமையும் கனிவும் தன்னை மேலும் வியக்க வைத்ததாக அனிஷ்மா கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “உண்மையான ரசிகையின் கனவு நனவாகியுள்ளது” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link