பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தருண் முன்னேறினார்.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் தருண், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய தருண், இரண்டாவது செட்டை 22-20 என வென்றார். மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய தருண் 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 18-21, 21-16, 16-21 என, ஹாங்காங்கின் ஜேசன் குனாவனிடம் தோல்வியடைந்தார்.
சாத்விக் காயம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 15-21, 28-25 என, ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா, யமாஷிதா ஜோடியை வீழ்த்தியது. ஆனால் சாத்விக்சாய்ராஜின் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இந்திய ஜோடி காலிறுதியில் இருந்து விலகியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 17-21, 11-21 என சீனதைபேயின் செங் குவான் சென், பிங்-வெய் லின் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 15-21, 17-21 என ஹாங்காங்கின் ஜியா ஜுவான் காவ், மெங் யிங் வு ஜோடியிடம் தோற்றது.
