சென்னை: சூரியசக்தி மின் திட்டங்களில் அதிக முதலீடுகளை ஈர்க்க, ‘ஓபன் ஆக்சஸ்’ எனப்படும் திறந்தவழி அணுகல் கட்டணங்களை குறைக்குமாறு, தமிழக மின் வாரியத்துக்கு முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஒரு யூனிட் சூரியசக்தி மின் கொள்முதல் விலை, கடந்த 2018ல் 7.01 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக குறைந்து, தற்போது 2.61 ரூபாயாக உ ள்ளது.
மின் வாரியம் கேட்கும் விலை குறைவாக இருப்பதுடன், மின்சாரம் கொள்முதலுக்கான பணத்தையும் குறித்த காலத்தில் தருவதில்லை. இதனால், மின் வாரியத்துக்கு மின்சாரம் வழங்க, சூரியசக்தி நிறுவனங்கள் விருப்பம் காட்டவில்லை.
அதேசமயம், தனியார் நிறுவனங்கள் சுய தேவைக்கும், மூன்றாம் நபருக்கு மின்சாரம் விற்கவும் சூரியசக்தி மின் நிலையத்தை அமைக்கின்றன. இந்த மின்சாரத்தை எடுத்துச்செல்ல, திறந்த வழி கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது.
இந்த கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், முதலீடு செய்த நிறுவனங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
இதுகுறித்து, முதலீட்டாளர்கள் கூறியதாவது:
சூரியசக்தி மின்சாரத்தை, உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பயன்படுத்தும் இடத்துக்கு எடுத்து செல்வதற்கு, ‘ஓபன் ஆக்சஸ்’ எனப்படும் திறந்த வழி கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது.
இது, தமிழகத்தில் தான் ஒரு யூனிட்டுக்கு சராசரியாக, இரண்டு ரூபாய் என மிகவும் அதிகமாக உள்ளது; மற்ற மாநிலங்களில், ஒரு ரூபாய்க்கு கீழ் உள்ளது. எனவே, திறந்த வழி கட்டணங்களை குறைக்க வேண்டும்.
இது தவிர, சூரியசக்தி மின் நிலையங்கள் அதிகம் உள்ள இடங்களில் இருக்கும் துணைமின் நிலையங்களின் திறனை அதிகரிப்பதுடன், கூடுதலாக பசுமை மின்சாரத்திற்கான தனி வழித்தடங்களை அமைக்க வேண்டும்.
சூரியசக்தி மின் நிலையம் அமைக்க பயன்படுத்தப்படும் சூரியசக்தி மின் தகடு, அலுமினிய பிரேம், காப்பர் உட்பட பல்வேறு மூலப்பொருட்களின ் விலை மிகவும் அதிகரித்துள்ளதால், இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில், சூரியசக்தி, காற்றாலையை ஒருங்கிணைத்து தனி கொள்கைகள் உள்ளன. தமிழகத்திலும் கொள்கையை வெளியிட போவதாக அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை வெளியிடப்படவில்லை.
எனவே, சூரியசக்தி மின் திட்டங்களில் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு மின் வழித்தட கட்டணத்தை குறைப்பதுடன், சலுகைகள் அடங்கிய கொள்கைகளை விரைவில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
