சூலுார்: மேற்கு மண்டலம் தி.மு.க., வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும், என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த முதலிபாளையத்தில் கோவை, நீலகிரி மாவட்ட இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், ‘களத்தில் இளைஞரணி’ என்ற வாசகத்துடன் தேர்தல் பணியாற்றி, 100 சதவீத வெற்றியை பெற்றோம். அதேபோல், வரும் சட்டசபை தேர்தலிலும், 100 சதவீத வெற்றியை பெறவேண்டும்.
யார், யாரோ கோவையை தங்கள் கோட்டை என்கின்றனர். மேற்கு மண்டலம் எப்போதும் தி.மு.க., வின் கோட்டை என, நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் எனும் ஜனநாயக போருக்கு அனைவரும் தயாராக வேண்டும். கடைசி நேரத்தில் கூடுதல் எபெக்ட் காட்டவேண்டும்.
தேர்தல் வெற்றிக்கு பின், மகளிர் உரிமை தொகை, 2 ஆயிரமாக உயர்த்தப்படும், எனவும், முதல்வர் அறிவித்துள்ளார். இச்சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க, நமது வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய பா.ஜ., அரசு, நம் மாநிலத்துக்கான நிதியை வழங்க மறுக்கிறது. அ.தி.மு.க., அலுவலகம் சென்னையில் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்று கூட்டணி பேசி, அவர்களுக்கு அடிமையாக உள்ளார். அவர்களுக்கு தோல்வி உறுதியாகிவிட்டது. எத்தனை ‘டீம்கள்’ வந்தாலும் தி.மு.க.,தான் சாம்பியன். மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. உங்கள் குடும்பத்தில் இருந்து பிரசாரத்தை துவக்குங்கள்.
அ.தி.மு.க., வின், கடந்த, 10 ஆண்டு ஆட்சியின் அவலங்களையும், தி.மு.க., ஐந்து ஆண்டு ஆட்சியின் சாதனைகளையும் ஒப்பிட்டு மக்களிடம் பிரசாரம் செய்யுங்கள். மக்களிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள்.
சிறிய தவறு செய்தாலும் அதை நமக்கு எதிராக பெரிதாக்க, ஊடகங்கள் காத்திருக்கின்றன. அடுத்து வரும், 32 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உண்மையாக உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்க நான் பொறுப்பு. வெற்றியை பெற்று தருவது உங்கள் பொறுப்பு. தமிழ்நாடு என்றும் தலைகுனியாது என்பதை தேர்தலில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
