செங்கோட்டையனால் சீட் இழந்த எம்.எல்.ஏ.,

அ .தி.மு.க., கூட்டணியில் மடத்துக்குளம் தொகுதியை அ.ம.மு.க.,விற்கு ஒதுக்கிய பின்னணியில், செங்கோட்டையன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் துவக்கியுள்ள த.வெ.க.,வில் இணைந்துள்ளார். செங்கோட்டையனுடன் தொடர்பில் இருந்த முன்னாள் எம்.பி., உள்ளிட்ட பலரையும், கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கினார்.

அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், செங்கோட்டையன் ஆதரவாளராக இருந்து, பழனிசாமி பக்கம் நின்ற பலருக்கும் மீண்டும் போட்டியிட ‘சீட்’ வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால், அ.தி.மு.க., திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலராகவும், மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் உள்ள மகேந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க.,விற்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் செங்கோட்டையன் என, தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

செங்கோட்டையன் மகன்வழி பேரன் மிதிலேஷ் மற்றும் எம்.எல்.ஏ., மகேந்திரன் மகள் விது பிரதிக் ஷா திருமணம், 2024 ஜூன் மாதம் நடந்தது. இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று வாழ்த்தினார்.

கட்சியில் இருந்து வெளியேறிய செங்கோட்டையனுக்கு, குடும்ப ரீதியாக நெருக்கடி மற்றும் மன உளைச்சலை தரும் வகையில், மகேந்திரனுக்கு பழனிசாமி சீட் வழங்கவில்லை. அ.ம.மு.க., கேட்காத நிலையில், அந்த தொகுதியை அக்கட்சிக்கு பழனிசாமி தாரைவார்த்துள்ளார். ஜெ., பாணியில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் குடும்பத்துடன் தொடர்புள்ளோரையும், ப ழனிசாமி தன் அதிரடி நடவடிக்கை வாயிலாக ஓரம் கட்டியுள்ளார்.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link