தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமலேயே உள்ளது. இதனால் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் களத்திற்குச் செல்லாமல் தலைமை அறிவிக்கும் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக நிர்வாகியும் கோபிச்செட்டிபாளையம் தொகுதியின் வேட்பாளருமான செங்கோட்டையனிடம் நாதக வேட்பாளர் ஓட்டு கேட்ட சுவாரஸ்ய சம்பவன் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கடந்தாண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தவெகவில் இணைந்த உடனேயே கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த செங்கோட்டையனுக்கு, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்துக்கு நேற்று முன் தினம் சென்றார். அப்போது நாம் தமிழர் கட்சி சார்பாக அதே தொகுதியில் போட்டியிட சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது உடனே சீதாலட்சுமி செங்கோட்டையனை பார்த்து, ‘பெரியப்பா விவசாயி சின்னத்துக்கு எனக்கு ஓட்டு போடுங்க..’ என்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்டார். இதனை கண்ட செங்கோட்டையனும் சிரித்துக்கொண்டே வாழ்த்திவிட்டு அங்கிருந்து சென்றார். இதனை கண்ட அங்கிருந்த தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
