செஞ்சி சிறுமி வழக்கு: ஆசிரியரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி போலீசின் அடுத்தக்கட்ட மூவ்? – gingee girl missing case cid police intensify probe questioning school teacher

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலமுண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இரண்டாவது மகளான சிறுமி ஹேமலதா காணாமல் போய் தற்போது வரை 17 நாட்கள் ஆகின்றன. தமிழக காவல்துறைக்கு இந்த வழக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், சிறுமியைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி காணாமல் போன சிறுமி குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடந்த ஏழு நாட்களாக சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிறுமி படித்த பள்ளிக்குச் சென்ற போலீஸார், அங்குள்ள ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது? அக்டோபர் 11ஆம் தேதி நடந்த சம்பவம்

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு சிறுமி ஹேமலதா தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு பெற்றோருடன் படுத்து உறங்கியுள்ளார். அன்று அவரது தந்தை வேலைக்காக வெளியூருக்குச் சென்றிருந்ததால், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

மறுநாள் அதிகாலை 5 மணியளவில், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு மட்டும் சிறுமி, “அம்மா, அம்மா”என அலறும் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு சிறுமி எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது குறித்த எந்தத் தெளிவான தகவலும் கிடைக்கவில்லை.

சிறுமி மாயமான நாளில் காணாமல் போன சாமியார்

சிறுமி ஹேமலதா காணாமல் போன அதே நாளில், அந்தக் கிராமத்தில் இருந்த சரவணன் என்ற சாமியாரும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்குப் பிறகு அவரைப் பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மலைப்பகுதிகள், விவசாய நிலங்களில் தீவிர தேடுதல்

சிறுமி மாயமான வழக்கில், ஆலமுண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள், விவசாய நிலங்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

பள்ளி ஆசிரியர்களிடம் சிபிசிஐடி விசாரணை

இந்தச் சூழலில், சிபிசிஐடி ஆய்வாளர் ரேவதி தலைமையிலான குழுவினர், சிறுமி ஹேமலதா படித்த பள்ளிக்குச் சென்று அவரது வகுப்பு ஆசிரியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி காணாமல் போனது தொடர்பாகக் கிடைக்கக்கூடிய தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள்:

சிறுமி ஹேமலதா காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும்10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுபோன்ற சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

பாதுகாப்பு குறித்த கேள்வி?

இதற்கிடையே, தேனி சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 குற்றவாளிகள் தப்பியோடிய சம்பவமும், புழல் சிறையிலிருந்து இரண்டு குற்றவாளிகள் தப்பிய சம்பவமும் தமிழகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தப்பியோடிய குற்றவாளிகள் மீண்டும் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

சவுமியா அன்புமணி கேட்ட அதிரவைக்கும் கேள்வி…என்ன விஷயம் தெரியுமா?

17 நாட்களாகியும் சிறுமி ஹேமலதா குறித்த தகவல் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை மற்றும் தேடுதல் பணிகள் மீது கவனம் திரும்பியுள்ளது.

Source link