சென்னை: கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்த உள்ளது.
கடந்தாண்டு, செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. விஜயிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மீண்டும் நேற்று ஆஜராக, சி.பி.ஐ., தரப்பில், விஜய்க்கு ‘சம்மன்’ அனுப்பியிருந்தனர். தேர்தல் பணிகள் காரணமாக, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 15 நாட்கள் விலக்கு அளிக்குமாறு, விஜய் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, வரும் 15ம் தேதி ஆஜராக வேண்டும் என, விஜய்க்கு சி.பி.ஐ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. அதை ஏற்று, வரும் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
