சென்னை:'இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று, மாநிலங்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க நினைக்கிறது; இது

சென்னை:’இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று, மாநிலங்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க நினைக்கிறது; இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்பது சாதாரண கல்வி சீர்த்திருத்தம் அல்ல; அது மொழி திணிப்பை நோக்கியது. இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில், நாட்டின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழி பாரம்பரியத்தை திட்டமிட்டு ஒதுக்கி, ஹிந்தி திணிப்புக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயல். அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜ., தலைமையிலான அரசு, இதை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

மும்மொழி கொள்கை

என்பது, ஹிந்தி பேசாத மாநிலங்களில், அதை விரிவுபடுத்தும் முயற்சி. ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளை கட்டாயமாக படிப்பரா.

இது குறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒரு சார்பையும் பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. இந்த முரண் வெளிப்படையானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமைச்சருக்கு சவால்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கள், மிகவும் பொறுப்பற்றவை; அவை இந்தியாவின் பன்முகதன்மை, கூட்டாட்சி தத்துவம், மாநிலங்களுக்கான உரிமை ஆகியற்றின் மீது, அவருக்கு உள்ள அலட்சியத்தை பிரதிபலிக்கிறது. தமிழகம் மும்மொழி கொள்கையை உறுதியாக நிராகரிக்கிறது.

ஹிந்தி திணிக்கப்படவில்லை என்ற அவரது கூற்று நேர்மையற்றது. ஹிந்தி திணிப்பை ஏற்க மறுத்ததற்காக, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ், 2200 கோடி ரூபாயை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. எந்த சூழ்நிலையிலும், மொழி திணிப்பை தமிழகம் ஏற்காது.

தமிழக பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற, அவரது கருத்தும் ஆதாரமற்றது. ஒவ்வொரு இந்திய குழந்தையும், மூன்று மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும் என பிரகடனப்படுத்த தர்மேந்திர பிரதான் தயாராக இருக்கிறாரா.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாக தோல்வியை மறைக்க

முயற்சிக்கிறது தி.மு.க.,: தர்மேந்திர பிரதான்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கை, உண்மையில் மொழி விடுதலையை வலியுறுத்துகிறது. மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த கொள்கையை, கட்டாய ஹிந்தி என தவறாக சித்தரிப்பதன் மூலம் தாய்மொழியான தமிழை தமிழக முதல்வர் பாதுகாக்கவில்லை என்பதே அர்த்தம். நம் இளைஞர்கள், பன்மொழித்திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கும் தடைகளை தி.மு.க., அரசு உருவாக்குகிறது. பன்மொழித் திறனை ஓர் அச்சுறுத்தலாக சித்தரிப்பது தவறானது. தமிழ் மொழி பேசுவோர், பன்மொழித்திறன் பெற்று தன்னம்பிக்கையுடன் மொழி ரீதியாக வலுவூட்டப்படும் போது தமிழ் மொழியும் வலுவடையுமே தவிர, பலவீனம்அடையாது. அனைத்து மொழி களையும் சமமாக ஊக்குவிப்பதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கை அரசியலமைப்பு கோட்பாடுகளை நிலைநிறுத்துகிறது. தற்போது உள்ள இருமொழி அமைப்பின் வரம்புகளையும் அது பூர்த்தி செய்கிறது. நாடு முழுதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளை கற்க தீவிரமாக ஊக்குவிக்கும் நிலையில், தி.மு.க., அரசு ஓட்டு வங்கிக்காக பிளவுபடுத்தும் அரசியலை முன்னிறுத்தி தமிழக மாணவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை மறுத்து வருகிறது. முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சீர்திருத்த நடவடிக்கையை, மொழி திணிப்பு என தவறாக சித்தரிப்பது, தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும். தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு என்ற வாதத்தை அவர் முன்னெடுத்துள்ளது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Source link