சென்னைக்கு 'நாலு' நல்லா இருக்குமா… * இன்று டில்லி அணியுடன் மோதல்

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்று பரிதாப நிலையில் உள்ளது. கேப்டன் ருதுராஜ். சஞ்சு சாம்சன் தடுமாறுவது பலவீனம். இன்று இவர்கள் வலுவான துவக்கம் தர வேண்டும். ‘மிடில் ஆர்டரில்’ ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா, பிரஷாந்த் வீர் உள்ளிட்ட இளம் வீரர்கள் விளாசினால் நல்லது. சர்பராஸ் கான் ரன் சேர்ப்பது பலம்.

தோனி எப்படி

முதுகு வலியில் இருந்து மீண்ட பிரவிஸ் இடம் பெறலாம். அதிரடிக்கு ஷிவம் துபே உள்ளார். கால் தசை பிடிப்பால் அவதிப்படும் தோனி களமிறங்குவது பற்றி உறுதியான தகவல் இல்லை. பந்துவீச்சில் கலீல் அகமது தவிர மற்ற அனைவரும் ரன்னை வாரி வழங்குகின்றனர். இதன் காரணமாக பெங்களூரு அணி 250 ரன் குவித்தது.

பஞ்சாப் அணி 210 ரன்னை எளிதாக ‘சேஸ்’ செய்தது. மாட் ஹென்றிக்கு பதிலாக குர்ஜப்னீத் சிங்கை சேர்க்கலாம். விக்கெட் வீழ்த்த முடியாமல் தவிக்கும் ‘ஸ்பின்னர்’ நுார் அகமது நீக்கப்பட்டு, அகீல் ஹூசைன் இடம் பெறலாம்.

ஒட்டுமொத்த சென்னை வீரர்களும் தங்களது நாலாவது லீக் போட்டியில் இன்று எழுச்சி கண்டால், முதல் வெற்றியை ருசிக்கலாம்.

ஒரு ரன் சோகம்

டில்லி அணி கடந்த போட்டியில் ஒரு ரன்னில் குஜராத்திடம் தோற்ற சோகத்தில் உள்ளது. ராகுல், நிசங்கா வலுவான துவக்கம் தருவது பலம். நிதிஷ் ராணா, கேப்டன் அக்சர் படேல் தடுமாறுவதால், ‘மிடில் ஆர்டர்’ பலவீனமாக உள்ளது. கடைசி கட்டத்தில் விளாச, மில்லர், ஸ்டப்ஸ் உள்ளனர். குஜராத்திற்கு எதிராக கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் ஓடுவதை தவிர்த்தார் மில்லர். இதுவே தோல்விக்கு வித்திட்டது. இதற்கு இன்று பரிகாரம் தேட முயற்சிக்கலாம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 31 போட்டிகளில் மோதின. சென்னை 19, டில்லி 12ல் வென்றன.

* சேப்பாக்கத்தில் மோதிய 10 போட்டியில், சென்னை 7, டில்லி 3ல் வென்றன.

மழை வருமா

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை

சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. ‘ஸ்பின்னர்’கள் ஓரளவு சாதிக்கலாம்.

Source link