சென்னை:தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று, பா.ஜ., – காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மனு தாக்கல் செய்ய உள்ளதால், தேர்தல் அலுவலகங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்தை பெறப்போகும் கட்சியை தேர்வு செய்வதற்கான சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தி.மு.க., -அ.தி.மு.க., – த.வெ.க., – நாம் தமிழர் என, நான்கு முனை போட்டி நிலவுகிறது.
மூன்று நாட்கள்
இது போக, இந்த கூட்டணிகளில் இடம் கிடைக்காத கட்சிகள் சில, கூட்டணியாகவும், தனியாகவும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது; இன்று கடைசி நாள்.
அரசு விடுமுறை நாட்கள் போக, இதுவரை மூன்று நாட்கள் வேட்பு மனு தாக்கல் நடந்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட, இதுவரை 3,430 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஆண் வேட்பாளர்களிடம் இருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடம் இருந்து 698 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை பலர் தாக்கல் செய்துள்ளனர்.
மாற்று வேட்பாளர் களாக, தங்கள் கட்சி அல்லது குடும்ப உறுப்பினர்களை மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட, 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
தொண்டாமுத்துார் 34, குளித்தலை 31, கோவை தெற்கு 30, தி.நகர் 28, பர்கூர் 29, திருச்செங்கோடு, சேலம் மேற்கு 28, கோபிசெட்டிபாளையம், ராயபுரம், மதுரவாயல் 27, நாங்குனேரி, பல்லாவரம், ஆர்.கே.நகர் தொகுதிகளில் 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால், தேர்தல் நடத்தும் அலுவலகங்களில், இன்று வேட்பு மனு தாக்கல் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., 27 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இவ்விரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இறுதி நாளான இன்று, காங்கிரஸ் – பா.ஜ., வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்ய உள்ளனர். இறுதி நாளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சுயேச்சைகளும் அதிகளவில் ஆர்வம் காட்டுவர்.
அதனால், தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக காலை 11:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.
இறுதி நாளான இன்று கூட்டம் அதிகமாக இருந்தால், வேட்பாளர்களுக்கு ‘டோக்கன்’கள் வழங்கப்படும்.
டோக்கன்
பிற்பகல் 3:00 மணிக்கு முன் எத்தனை பேர் வந்தாலும், அவர்களுக்கு அனுமதி தரப்படும். டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய எவ்வளவு நேரமானாலும் அனுமதிக்கப்படும். மாலை 3:00 மணிக்கு அப்புறம் வருபவர்களுக்கு அனுமதி தரப்படாது; அலுவலக கதவுகள் மூடப்பட்டு விடும்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். நாளை, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்க உள்ளது.
