சென்னையில் செய்பர்ட், ஆலன் 'மின்னல்' * நியூசி.,யிடம் 'துாசியான' எமிரேட்ஸ்

சென்னை: உலக கோப்பை லீக் போட்டியில் செய்பர்ட், ஆலன் அதிரடி கைகொடுக்க, நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்துவீச்சு எடுபடவில்லை.

சென்னையில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற எமிரேட்ஸ் கேப்டன் முகமது வசீம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சாப்மென் சாகசம்

எமிரேட்ஸ் அணிக்கு ஆர்யான்ஷ் சர்மா (8) ஏமாற்றினார். பின் முகமது வசீம், அலிஷான் ஷராபு பொறுப்பாக ஆடினர். ஹென்றி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஷராபு, அரைசதம் (39 பந்தில்) எட்டினார். அடுத்து கேப்டன் சான்ட்னர் பந்தையும் துாக்கி அடித்தார். எல்லையில் சாப்மென் அந்தரத்தில் பறந்து பிடித்தார். அப்போது தடுமாறிய இவர், பந்தை சாமர்த்தியமாக மைதானத்துக்குள் எறிந்தார். அங்கே காத்திருந்த டேரில் மிட்சல் கச்சிதமாக பிடிக்க, ஷராபு (55) பரிதாபமாக வெளியேறினார். வசீம், 37 பந்தில் அரைசதம் எட்டினார்.

ஒரே ஓவரில் 27 ரன்

கிளன் பிலிப்ஸ் வீசிய (18வது) ஓவரில் மயங்க் குமார் (4,6), வசீம் (5 ‘நோ-பால்’, 6) விளாச, மொத்தம் 27 ரன் எடுக்கப்பட்டன. மயங்க், 21 ரன் எடுத்தார். எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 173/6 ரன் எடுத்து, உலக கோப்பை அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. கேப்டன் வசீம் (66) அவுட்டாகாமல் இருந்தார்.

செய்பர்ட், ஆலன் மிரட்டல்

சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட், பின் ஆலன் கலக்கல் துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர் மழை பொழிய, அனுபவம் இல்லாத எமிரேட்ஸ் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. 23 பந்தில் அரைசதம் எட்டினார் செய்பர்ட். ஆலன், 27 பந்தில் அரைசதம் அடித்தார். முகமது ரோகித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய செய்பர்ட், விரைவான வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175/0 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. செய்பர்ட் (89 ரன், 42 பந்து, 12×4, 3×6), ஆலன் (84 ரன், 50 பந்து, 5×4, 5×6) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை செய்பர்ட் வென்றார்.

சாதனை ஜோடி

‘டி-20’ உலக கோப்பை அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் (175*) சேர்த்து செய்பர்ட், ஆலன் சாதனை படைத்தனர். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் பட்லர்-ஹேல்ஸ் ஜோடி (170*, எதிர், இந்தியா, 2022, அடிலெய்டு) உள்ளது.

* ‘டி-20’ அரங்கில் நியூசிலாந்து சார்பில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி பட்டியலில், செய்பர்ட்- ஆலன் (175*) 2வது இடம் பிடித்தனர். முதலிடத்தில் கான்வே- கிளன் பிலிப்ஸ் (184 ரன், எதிர், வெ.இ., 2020, மவுன்ட் மவுன்கனுய்) உள்ளனர்.

* ‘டி-20’ உலக கோப்பையில் நியூசிலாந்து முதல் முறையாக 10 விக்கெட்டில் வென்றது. 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் 3வது சிறந்த ‘சேஸ்’ பதிவு செய்தது.

* ‘டி-20’ அரங்கில் அதிக சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர்களில் நான்கவாது இடத்தை செய்பர்ட், ஆலன் பகிர்ந்து கொண்டனர். இருவரும் தலா 100 சிக்சர் அடித்துள்ளனர். முதலிடத்தில் கப்டில் (173 சிக்சர்) உள்ளார்.

நடவடிக்கை

யு.ஏ.இ., பேட்டர் முகமது ஜோஹெய்ப் 27. இதுவரை 16 ‘டி-20’ல் 303 ரன் எடுத்துள்ளார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன், இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ‘இதற்கான காரணம் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்,’ என யு.ஏ.இ., அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link