சென்னையில் தொகுதி பெற தி.மு.க., அணியில் போட்டி; அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் அலறி ஓட்டம்

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளை பெற, தி.மு.க., கூட்டணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில், ‘சென்னையில் தொகுதியா; ஆளைவிடுங்க சாமி’ என, கட்சிகள் ஓட்டமெடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்க, ஏழு நாட்கள் இருக்கும் நிலையில், தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கூட்டணியிலும், தொகுதி பங்கீடு இன்னும் முழுமை அடையவில்லை.

தொகுதிகளின் எண்ணிக்கை முடிவானாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்ய முடியாமல், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் திணறி வருகின்றன.

தி.மு.க., கூட்டணியில் காங்., – வி.சி., – மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள், சென்னையில் தொகுதிகள் வேண்டும் என, அடம் பிடித்து வருகின்றன. கடந்த தேர்தலில், வேளச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை தி.நகர் மற்றும் வடசென்னையில் ஒரு தொகுதியை கேட்கிறது.

பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை, மா.கம்யூ., கட்சியும், வடசென்னையில் ஒரு தொகுதியை வி.சி.,யும் கேட்கின்றன. தி.மு.க., கூட்டணியில், சென்னை தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., அணியில் நிலைமை தலைகீழாக உள்ளது. சென்னை தொகுதிகள் என்றாலே, ஆளை விடுங்க சாமி என, அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டம் பிடிக்கின்றன.

தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தி.நகர், வேளச்சேரி தொகுதியை கேட்டு, பா.ஜ., அடம் பிடிக்கிறது. ஆனால், மற்ற தொகுதிகள் என்றால் பா.ஜ.,வும் மறுக்கிறது. பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., ஆகிய கட்சிகள், சென்னையில் எங்களுக்கு தொகுதிகள் வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, கூட்டணியில் பிற சிறு கட்சிகளும், தங்களுக்கு செல்வாக்குள்ள பிற மாவட்டங்களில்தான் ஆர்வம் காட்டுகின்றன; சென்னையை விரும்பவில்லை. இதனால், தி.மு.க.,வை வலுவாக எதிர்க்கும் திறனுள்ள வேட்பாளரை நிறுத்த, அ.தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது.

Source link