சென்னையில் தொழில்நுட்ப கோளாறால் கத்தார் விமானம் ரத்து: 207 பயணிகள் தவிப்பு

சென்னை,

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கத்தார் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 207 பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப கோளாறு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 207 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 219 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, ஓடுபாதைக்குச் செல்லத் தயாரானபோது, விமானிகள் இறுதிக்கட்ட சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது.

விமானம் ரத்து

இதையடுத்து விமானத்தை இயக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானிகள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே தொழில்நுட்ப என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் முயற்சி செய்தும் கோளாறைச் சரிசெய்ய முடியாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பயணிகள் தவிப்பு

இதையடுத்து பயணிகள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் மீண்டும் கத்தார் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்ல, தோகாவில் இருந்து இணைப்பு விமானங்களில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களின் பயணத் திட்டமும் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பயணிகள் பரிதவித்தனர்.

Source link