சென்னையில் 'பின்டெக் டவர்' ரூ.249 கோடி முதலீட்டில் திறப்பு

சென்னை: நிதித்துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, ‘டிட்கோ’ நிறுவனம் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில், 249 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ‘பின்டெக்’ கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

வங்கி, காப்பீடு உள்ளிட்ட நிதித்துறை நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், அந்த துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 56 ஏக்கரில் நிதிநுட்ப நகரத்தை, ‘டிட்கோ’ அமைத்துள்ளது.

இங்கு 5.56 லட்சம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் நிதிநுட்ப கட்டடம் அமைக்க முதல்வர் ஸ்டாலின், 2023 ஜூன், 17ல் அடிக்கல் நாட்டினார்.

இரண்டு அடித்தளங்கள், தரைதளம் மற்றும் 11 தளங்களுடன் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

பின், ‘பிரைம் பாரெக்ஸ், சிம்ப்ட்ரா டெக்னாலஜிஸ், பிட்பின் வெல்த்’ ஆகிய நிறுவனங்களுக்கு, நிதிநுட்ப கட்டடத்தில் அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தொழில் துறை அமைச்சர் ராஜா, ‘டிட்கோ’ தலைவர் சந்தியா வேணுகோபால், மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

7,000 வேலைவாய்ப்பு

அமைச்சர் ராஜா கூறுகையில், “நிதிநுட்ப கட்டடம், அலுவலக இடங்களுடன், 250 பேர் அமரும் வகையிலான கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அதில், மூன்று நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ள நிலையில், மேலும் பல நிறுவனங்கள் தொழில் துவங்க உள்ளன. “நிதிநுட்ப கட்டடத்தால், 7,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நிதிநுட்ப நகரில் தொழில் துவங்க ஆறு நிறுவனங்களுக்கு தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன,” என்றார்.

Source link