சென்னையில் ரூ. 77 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 

இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதே சமயம் அவசர தேவைக்காகக் கொண்டு செல்லப்படும் பணம் கைப்பற்றப்படுவதாக விமர்சனமும் எழுந்திருந்தது. 

இந்நிலையில் தான் சென்னை அசோக்நகர் 11வது நிழற்சாலையில் பறக்கும் படையினர் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களைக் கொண்டு சென்ற 21 வாகனங்கள் வந்துள்ளன. இதில் 20 வாகனங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு இருந்துள்ளது. ஆனால் அதில் இருந்த ஒரு வாகனத்தில் மட்டும் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களுக்கான உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பறக்கும் படையினர் வாகனத்தில் இருந்த நகைகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்த போது மொத்தம் 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் எனத் தெரியவந்தது. 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாகனத்தையும் நகைகளையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட  முதற்கட்ட விசாரணையில் சென்னை கிண்டியில் உள்ள ஈக்காட்டுதாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைமகள் நகரிலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்துள்ளது. சென்னை அசோக் நகரில் வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link