சென்னையில் ரேடார் கருவி செயல்படவில்லை என தகவல்; வானிலை கணிப்பதில் சிக்கல்

சென்னை,

சென்னையில் வானிலையை கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளது. இந்நிலையில், வானிலையைக் கண்காணிக்கும் சென்னை ரேடார் கருவி தொழில் நுட்பக் கோளாறால் செயல்படவில்லை.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேடார் செயல்படாததால் நிகழ்நேர வானிலை நிலவரத்தை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் ரேடார் கருவி என்பது மழை எங்கு பெய்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பெய்கிறது, புயல் எந்தத் திசையில் நகர்கிறது போன்றவற்றைக் கண்டறிய உதவுகிறது. எந்தப் பகுதியில் மழை பெய்கிறது என்பதைக் கண்டறியும். லேசான மழையா, கனமழையா என்பதை மதிப்பிட உதவும்.

அதோடு, புயல் எங்கே உள்ளது? எந்தத் திசையில் நகர்கிறது என்பதைக் கண்காணிக்கும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை மேகங்களின் நகர்வு, மழையின் தீவிரம் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் சென்னை வானிலை மையத்தின் ரேடார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தச் சூழலில் ரேடார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதன் மூலம் மேற்கொள்ளப்படும் மழை மேகக் கண்காணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Source link