சென்னை: அடுத்த மாதம் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை

சென்னை: அடுத்த மாதம் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்டுகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஓரளவுக்கு சுமூகமாக முடிந்துவிட்டது.

அதிமுக – பாஜ கூட்டணியைப் பொறுத்தவரையில் இன்னும் தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்து முடிந்துள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியைச் சந்திக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மேட்ரிஷ் – ஐஏஎன்எஸ் ( Matrize-IANS) இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், ஆளும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அதிமுக – பாஜ கூட்டணி 114 முதல் 127 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களையே பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் விஜய்யின் தவெக 6 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்று அந்தக் கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன.

அதேபோல, 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் பாஜ கூட்டணி 96 முதல் 98 இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று மேட்ரிஷ் – ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 26 முதல் 28 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவைப் பொறுத்தவரையில் ஆட்சியைப் பிடிப்பதில் இழுபறி நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 61 முதல் 71 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 58 முதல் 69 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது. மொத்தம் உள்ள 294 இடங்களில் 155 முதல் 170 இடங்கள் வரையில் திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்தத் தேர்தலில் பாஜவுக்கு அதீத வளர்ச்சி இருக்கும் கூறப்பட்டுள்ளது. பாஜ 100 முதல் 115 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஓவைசி கட்சி 5 முதல் 5 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link