சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் ஞானவேல் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) மாலை புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், ‘அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனை வெளியே சொன்னால் தொலைத்து விடுவேன் என மிரட்டினார். எனக்கு மட்டுமல்ல, கல்லூரியில் என்னுடைய தோழிகள் சிலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
இது தொடர்பாக அண்ணா பல்கலை கமிட்டியிடம் புகார் அளித்துள்ளேன். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணையை துவக்கினர். இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ, மாணவிகள், பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாணவியின் புகார் பேரில் அண்ணா பல்கலை பேராசிரியர் ஞானவேல் பாபு சஸ்பெண்ட் செய்து பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
