சென்னை: அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவியருக்கு பாலியல் தொல்லை தொடரும் கொடூரம் அம்பலமாகியுள்ளது. தொல்லை கொடுத்ததாக, பல்கலை பேராசிரியர் ஞானவேல்பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், ‘யார் அந்த சார்’ என்ற கேள்வியால், மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர், 2024ம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், முக்கியமான ஒருவரை தி.மு.க., அரசு காப்பாற்ற முயன்றதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சிகள், ‘யார் அந்த சார்’ என கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையானது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு, 30 ஆண்டுகளுக்கு குறையாத, ஆயுள் தண்டனை வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம், பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘பேராசிரியர் ஞானவேல்பாபு என்பவர், தனக்கும், பல மாணவியருக்கும், நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்’ என, தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் மகளிர் போலீசார், பேராசிரியர் ஞானவேல்பாபு மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தசூழலில், பேராசிரியர் ஞானவேல்பாபு மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாணவர் அமைப்பினர் நேற்று, அண்ணா பல்கலை வளாகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், மாணவியின் பாலியல் தொந்தரவு புகாரை தொடர்ந்து, அண்ணா பல்கலை, தொழில்துறை இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை, ‘சஸ்பெண்ட்’ செய்து, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது.
புகார் தொடர்பாக, அண்ணா பல்கலையும் துறை ரீதியிலான விசாரணையை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பேராசிரியர் ஞானவேல்பாபு, 50, படிப்புக்காக பொருளாதார ரீதியாக நெருக்கடியை சந்திக்கும் மாணவியருக்கு உதவிகள் செய்வது போல, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பேராசிரியர் ஞானவேல்பாபுவை, சென்னை மாநகர போலீசார், நேற்று கைது செய்தனர். அவரை, சென்னைக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஞானவேல்பாபு, தற்போது, கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலை பேராசிரியர் குடியிருப்பில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கடந்த, 1998ம் ஆண்டில், சென்னை பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின், திருச்சி என்.ஐ.டி.,யில், எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்பை முடித்துள்ளார். இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் பல மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ஞானவேல்பாபு மீது போலீசில் புகார்கள் குவிகின்றன.
கடந்த முறை பாலியல் புகாரில் சிக்கியவர்களை தி.மு.க., அரசு காப்பாற்றியது. அப்போது எழுந்த, ‘யார் அந்த சார்’ என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என, அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீண்டும் சர்ச்சையை துவக்கியுள்ளன.
