சென்னை; அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு மண்ணச்சநல்லூர் தொகுதி

சென்னை; அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு மண்ணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஜூரம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. முக்கிய மற்றும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணிகள் தொகுதி ஒதுக்கீடுகளை முடித்துவிட்டு, வேட்பாளர்கள் அறிவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. திமுக இன்னமும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

அதிமுகவோ இரண்டு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது. முதல் கட்டமாக 23 பேர்களின் பெயர்களை வெளியிட்ட அதிமுக, இன்று 2ம் கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் மொத்தம் 127 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டு இருக்கிறது.

தற்போது வரை 150 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 167 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதால், எஞ்சிய தொகுதிகளுக்கான இறுதி பட்டியலும் விரைவில் வெளியாக இருக்கிறது.

சொந்த கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கூட்டணிக்கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐஜேகே.புதிய நீதிக்கட்சி, சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம் ஆகிய கூட்டணி கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கின்றன. இதில் சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி அண்மையில் தான் அதிமுக கூட்டணியில் இணைந்தது.

முத்தரையர் முன்னேற்ற சங்கம் தான் தற்போது சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகமாக புதிய கட்சியாக உருமாறி இருக்கிறது. கட்சியாக மாறிய பின்னர், கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, பின்னர் அதிமுக கூட்டணியில் இணைந்தது. அக்கட்சிக்கு ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கி இருந்தது.

ஸ்ரீரங்கம் அல்லது மண்ணச்ச நல்லூர் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதியை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மண்ணச்ச நல்லூர் தொகுதியை சிங்கத்தமிழர் முன்னேற்ற சங்கத்திற்கு அதிமுக அளித்துள்ளது. இங்கு இலை சின்னத்தில் அக்கட்சி களம் காண்கிறது. கட்சியின் வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Source link