சென்னை: அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கி, நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அனுமதி பெற்றுள்ளார்.
தனது மகன் அன்புமணி, மருமகள் சவுமியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கட்சி ரீதியாக சில நடவடிக்கைகளை, ராமதாஸ் எடுத்தார். பா.ம.க.,வில் இருந்து, தனது மகன் அன்புமணி உள்ளிட்ட பலரை நீக்கினார். ஆனால், பா.ம.க., தலைவராக அன்புமணி நீடிப்பார்; மாம்பழம் சின்னம் அவருக்குதான் சொந்தம் என்பதை, நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, பா.ம.க., போட்டியிடுகிறது.
அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணியில் இணைய, ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. சசிகலா துவங்கிய அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன், ராமதாஸ் கூட்டணி அமைத்தார். பல தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற புதிய கட்சியை ராமதாஸ் துவக்கியுள்ளார். அக்கட்சி சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்வதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
அக்கட்சி நட்சத்திர வேட்பாளர் பட்டியலில், ராமதாஸ், ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட, 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.
