சென்னை: ”அமெரிக்காவிடம் இந்தியாவை, பிரதமர் மோடி விற்று விட்டார்,” என , காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டினார்.
நுாறு நாள் வேலைத்திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை முகப்பேரில் நேற்று, பாதயாத்திரை நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதயாத்திரையை துவக்கி வைத்து, வேணுகோபால் பேசியதாவது:
நுாறு நாள் வேலைத்திட்டம் என்பது, உலகிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய திட்டம். மத்தியில் மோடி அரசு வந்த பின், உரிய நிதி ஒதுக்காமல், இத்திட்டத்தை சீர்குலைத்து விட்டது. காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
அது மட்டுமல்லாது, புதிய சட்டத்தின்படி இனி, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு, மாநில அரசுகள் தான், 40 சதவீத நிதியை வழங்க வேண்டும்.
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், காந்தியின் கொள்கைகளை தினமும் கொலை செய்து வருகின்றனர்.
இந்திய — அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி சரணடைந்து விட்டார். இந்தியாவின் நலன்களை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டார்.
அமெரிக்காவில் விளையும் வேளாண் பொருட்களை, வரியின்றி இறக்குமதி செய்ய, மோடி அனுமதி அளித்துள்ளார். இதனால், இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இந்திய — அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய வேளாண்மை, ஜவுளித் துறை கடுமையாக பாதிக்கப்படும். இதன் வாயிலாக, அமெரிக்காவிடம் இந்தியாவை மோடி விற்று விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில், ஜனநாயகம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பார்லி.,யில் எதிர்க்கட்சி தலைவரை பேச விடுவதில்லை. காங்கிரசும் -தி.மு.க.,வும் பழைய கூட்டாளிகள். இரண்டு கட்சிகளும் இணைந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளன.
தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு பேச்சுக்கு காத்திருக்கிறோம். விரைவில், தி.மு.க., குழு அமைத்து எங்களுடன் பேசும். பலதரப்பட்ட எண்ணங்களோடு, காங்கிரசில் பலரும் உள்ளனர்.
அவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் கட்சியின் கருத்தல்ல; அவர்கள் சொந்தக் கருத்து. எப்போதுமே, கட்சிக்கென்று ஒரு கருத்து இருக்கும்.
தமிழகத்தில் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். அனைத்து தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இங்கு கூடியுள்ளனர். அவர்கள் முன்னிலையில் கூறுகிறேன்.
தற்போதுள்ள தி.மு.க., வுடனான கூட்டணி குறித்து, யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
