சென்னை: அமைச்சரவையில் இடம்பெறும் நோக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு எம்எல்ஏவாக

சென்னை: அமைச்சரவையில் இடம்பெறும் நோக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு எம்எல்ஏவாக இருந்தாலே போதும் என்று திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அவரிடம் எம்பியாக இருக்கும்போது, எதற்காக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும், அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் கூறியதாவது;

ஏற்கனவே நான் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறேன். இரண்டு, இரண்டரை ஆண்டுகளில் அதை துறந்திருக்கிறேன். அதன்பின்னர் நான் சட்டசபை பொதுத் தேர்தல்களில் பங்கேற்றது இல்லை.

சட்டசபையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. தமிழக சட்டசபை தான் தமிழக அரசியலுக்கான ஒரு முகம். என்னதான் பார்லிமெண்டில் நாம் குரல் கொடுத்தாலும், தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்து பேசினாலும் தமிழக சட்டசபையில், தமிழக அரசியல் குறித்து, விளிம்பு நிலை மக்களின் பிரச்னைகள் குறித்து வலுவாக பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற அடிப்படையில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் 2 பேர் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள். அமைச்சராக இருக்கும் எல். முருகன், சி.வி.சண்முகம் ஆகியோர் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் முன்னாள் முதல்வர், இப்போது லோக்சபா எம்பியான வைத்திலிங்கமும் சட்டசபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அந்த வரிசையில் நானும் ஒரு வேட்பாளர்தான். இதில் எந்த நோக்கமும் இல்லை.

வைத்திலிங்கம் முதல்வர் கனவுடன் களத்தில் நிற்கிறார் என்று நீங்கள் சொல்வது சரி. நான் சட்டசபை உறுப்பினர் ஆனாலே போதும் என்ற கனவோடு களத்தில் நிற்கிறேன். அவ்வளவு தான்.

இவ்வாறு திருமாவளவன் பேட்டியளித்தார்.

Source link