சென்னை: அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், தனியார் பட்டா நிலங்களில் கனிமவளத் துறை உரிமம் அடிப்படையில், கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
அபராதம்
குவாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுப்பதை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்படும். இதன் அடிப்படையில், குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதில், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புடைய குவாரிகளுக்கு மட்டும், அபராதம் விதிக்கப்படுவதில்லை. அப்படியே விதித்தாலும் அபராத வசூலுக்கு அதிகாரிகள் முன்வருவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, 2015ம் ஆண்டை அடிப்படையாக வைத்து, விதிமீறல் குவாரிகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதில், ஒரு கன மீட்டருக்கு, 25 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவாரிகளில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான தொகையை அபராதத்துடன் வசூலிப்பதற்கான வழிமுறை அதில் இல்லை என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் விதிமுறைகள், சட்டங்களுக்கு எதிராக வரன்முறை திட்டம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு, 30,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று புகார் எழுந்துள்ளது. இது குறித்து, தமிழக மணல், எம் – சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உரிமம் பெற்றாலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் தான், கிருஷ்ணகிரி மாவட்ட குவாரிகள் உள்ளன.
இதில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது அப்பட்டமாக தெரிந்தாலும், கனிம வளத்துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பது இல்லை. பெயரளவுக்கு அபராதம் விதித்தாலும் வசூலிப்பது இல்லை. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அதில் கனிமவள திருட்டில் அபராதம் விதிக்க, எங்களுக்கு அதிகாரம் இல்லை என, பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் பதில் அளித்தனர். தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு குவாரிக்கும், 10 லட்சம் ரூபாய் முதல், 50 கோடி ரூபாய் வரை விதிக்கப்பட்ட அபராதங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
தனி நபர்கள்
இந்நிலையில், அரசு தற்போது அறிவித்துள்ள வரன்முறை திட்டம், விதிமீறியவர்களுக்கு ஜாக்பாட் பரிசு போன்று அமைந்துள்ளது. தமிழகத்தில் குவாரிகளுக்கு தனிநபர்கள் பெயரில் உரிமம் வழங்கப்பட்டாலும், முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தான் அவற்றை நடத்துகின்றனர். அரசின் இந்த வரன்முறை திட்டம், குவாரி உரிமதாரர்கள் பின்னால் உள்ள அமைச்சர்களுக்கு பயன் அளிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
