சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024ல் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமின் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 14 பேரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கே.ராஜசேகர் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட, 12 பேரின் ஜாமினை ரத்து செய்து, மார்ச் 6ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
அதேநேரம், அஞ்சலை, மலர்கொடி ஆகியோரின் ஜாமினை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, மருத்துவ காரணங்களுக்காக வழக்கறிஞர் அருணுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
