சென்னை: ‘இந்தத் தேர்தலோடு கருணாநிதி குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,’ என்று சென்னை ஆர்.கே.நகரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட போது அவர் பேசியதாவது;
கடந்த 5 ஆண்டுகள் திமுக அரசு கொடுமையான ஆட்சியை கொடுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலைத்தான் மக்கள் பார்த்தார்கள். இந்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகரத்திலும், தமிழகத்திலும் ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டு வரப்பட்டதா? இந்த ஆட்சியில் பார்ப்பது எல்லாம், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். இதுதான் நாள்தோறும் நடக்கிறது. கழிப்பறை கட்டண வசூலில் கூட கொள்ளையடித்த கட்சி திமுக. கேவலம், கழிப்பறையைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?
திமுக என்றால் ஊழல். ஊழல் என்றால் திமுக. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட திமுக அரசு தான், ஊழலுக்காக கலைப்பட்ட ஒரே அரசு. அதேபோல் ஊழலின் ஊற்றுக்கண் திமுக. ஊழல் என்று சொன்னால் திமுக தான் நினைவுக்கு வரும். திமுக என்றால் ஊழல் தான் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட ஊழல் நிறைந்த கட்சி மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டுமா…?
வாரிசு
ஸ்டாலினின் நோக்கம் என்ன..? கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஸ்டாலினை அறிமுகப்படுத்தி எம்எல்ஏவாக்கி, அமைச்சராக்கி, துணை முதல்வராக்கி, திமுகவிற்கு செயல் தலைவராக்கி பிறகு தலைவராக்கினார். கருணாநிதி போலவே கட்சியிலும், ஆட்சியிலும் இன்றைய முதல்வர் ஸ்டாலினும் தனக்குப் பின்னால், அதுவும் ஆண் வாரிசுகள் திமுக கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உதயநிதியை அறிமுகம் செய்து, துணை முதல்வராக்கி இருக்கிறார்.
திமுகவிற்கு உதயநிதியை இளைஞரணி செயலாளராக்கி இருக்கிறார். ஏன்… அந்தக் கட்சியில் வேறு இளைஞரே இல்லையா…? நன்றாக சிந்தித்துப் பாருங்கள். ஸ்டாலின் திமுகவின் தலைவர், உதயநிதி இளைஞரணி மாநிலச் செயலாளர், கனிமொழி துணைப் பொதுச்செயலாளர். இப்படி குடும்பத்தில் இருப்பவர்கள் தான் அதிகாரத்திலும் ஆட்சியிலும், கட்சியிலும் உயர்ந்த பதவியில் இருக்க முடியும். ஆனால், அதிமுக அப்படியல்ல, ஜனநாயகமுள்ள கட்சி. திமுகவில் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்தாலும், அவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது.
பி ‘டீம்’
எனக்கு பின்னால் அதிமுக நூறு ஆண்டுகள் தொடரும் என்று ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அவர் மறைந்த பிறகு இந்தக் கட்சி உடைந்து விடும், முடங்கி விடும் என்று நினைத்தார்கள். வழக்கு போட்டு தடுப்பதற்கு பி டீமை உருவாக்கி எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், மக்கள் துணையோடு, கட்சி தொண்டர்கள் துணையோடு எதிர்ப்புகள் எல்லாம் தூள் தூளாக உடைத்து நொறுக்கப்பட்டது.
எவ்வளவு பிரச்னைகள்…? உட்கட்சியில் பிரச்னையை தூண்டிவிட்டு இப்போது, வெளியே போயிருக்கிறார்கள். அவர்கள் உண்மையான முகம் வெளியே வந்து விட்டது. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த இயக்கத்தை கைப்பற்ற பல பேர் முயற்சி செய்தார்கள். அத்தனையும் உங்கள் துணையுடன் தடுத்து நிறுத்தி, அதிமுக வலிமையுள்ள இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறோம்.
ஸ்டாலினுக்கு பயம்
நான் டில்லிக்குப் போனாலே ஸ்டாலினுக்கு அதிர்கிறது. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நான் முதன்முதலாக தேர்தல் பிரசார பயணத்தை மயிலாப்பூரில் தொடங்கினேன். அந்த கூட்டத்தில் நான் பேசியதற்கு அடுத்த நாள் 3 அமைச்சர்கள் பதில் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார். உங்களுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் தான் என்ன பேசுறோம் என தெரியாமல் பேசுகிறார்கள் திமுகவினர்.
4 அதிகார மையங்கள்
திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமா.? ஏன் இங்கே இருக்கிற ராமசாமி, சின்னசாமி, குப்புசாமி அதிகாரத்திற்கு வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா…? இது என்ன வாரிசு அரசியலா… ராஜ பரம்பரையா… அரச பரம்பரையா….? ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தலோடு கருணாநிதி குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இனி தமிழகத்தை ஆளக்கூடியவர்கள் சாதாரண குடிமகன் தான். அதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை தகர்த்து எறிவீர்களா….?
இன்று தமிழ்நாட்டை 4 அதிகார மையங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. அவர்கள் தமிழகத்தை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி, மூன்றாவது சபரீசன், நான்காவது ஸ்டாலினின் மனைவி. இப்படி நான்கு அதிகார மையங்கள் இந்த நாட்டிற்கு தேவையா…? வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து இருக்கின்றோம். நம் கூட்டணி கட்சித் தலைவர்கள் மக்களுக்காக பாடுபடுவர்கள். திமுக தலைமையிலான கூட்டணி வெற்றுக்கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
