சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின்
நல்லகண்ணு மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! கருணாநிதியுடன் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணு காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். நல்லகண்ணு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!
திமுக எம்பி கனிமொழி
விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – தகைசால் தமிழர் நல்லக்கண்ணுவுக்கு செவ்வணக்கம்! தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
மத்திய அமைச்சர் முருகன்
தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், எளிய மக்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவருமான, தகைசால் தமிழர் நல்லகண்ணு மறைவு மிகுந்த மன வருத்தமளிக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டார். சமூகத்தில் நிலவிய சாதிய தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார். தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.ஓம் சாந்தி!
அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் நல்லகண்ணு மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். நல்லகண்ணுவை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் நல்லக்கண்ணு. அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!ஓம் சாந்தி!
நடிகர் ரஜினி
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
