சென்னை: ''இளைஞர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்டவைக்கு, அடிமையாகி விடக்கூடாது. அதில் சென்றால், வாழ்க்கை

சென்னை: ”இளைஞர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்டவைக்கு, அடிமையாகி விடக்கூடாது. அதில் சென்றால், வாழ்க்கை கெட்டு போய் விடும்,” என நடிகர் ரஜினி தெரிவித்தார்.

நடிகர் ரஜினி, ஹைதராபாதில் நடந்து வரும், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு, நேற்று விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

கமலுடன் நான் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்டில் துவங்க உள்ளது. ஜெயிலர் 2 படம் வெளியாகும் தேதியை, தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். ஜனநாயகன் திரைப்பட விவகாரம் குறித்து, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால், அவர்களுக்குத்தானே காயம் ஏற்படும். இளைஞர்கள் படிக்கிற வயதில், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை தவற விட்டு விட்டால், அவர்கள் வாழ்க்கை முழுதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இளைஞர்கள் கவனம் படிப்பில் மட்டும்தான் இருக்க வேண்டும். அவர்களுடைய சிந்தனை, செயல், அனைத்தும் படிப்பில் இருக்க வேண்டும். இளைஞர்கள் முதலில், தங்கள் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.

இளைஞர்களுக்கு நான் கொடுக்கக்கூடிய அறிவுரை என்னவென்றால், முதலில் குடிப் பழக்கம், கஞ்சா உள்ளிட்டதற்கு அடிமையாகி விடக்கூடாது. அதில் சென்றால் அவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link