சென்னை : ‘இ 20 பெட்ரோல் இந்திய தரநிலைகளுக்கு உட்பட்டு, முறையாக சோதிக்கப்பட்ட பாதுகாப்பான எரிபொருள்’ என, தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், எரிபொருள் இறக்குமதி செலவை குறைப்பதையும் நோக்கமாக கொண்டு, இம்மாதம், 1ம் தேதி முதல் நாடு முழுதும், ‘இ 20’ பெட்ரோல் அதாவது, 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. பெட்ரோலில், 20 சதவீதம் எத்தனால் மற்றும், 80 சதவீதம் பெட்ரோல் கலந்து வழங்கப்படும் எரிபொருளே, ‘இ 20’ ஆகும். இது, துாய்மையான எரிபொருளாக கருதப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோ கார்பன் வெளியேற்றம் கணிசமாக குறையும்.
இதனால், காற்று மாசுபாடு குறையும். கரும்பு சர்க்கரை ஆலைக்கழிவு மற்றும் தானியங்களில் இருந்து, எத்தனால் தயாரிக்கப்படுவதால், இந்திய விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். இதனால், நாட்டின் அன்னிய செலாவணி சேமிக்கப்படும். கடந்த, 2023 ஏப்ரலுக்கு பின் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள், இ 20 எரிபொருளுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு உள்ளன. எத்தனாலின் பயன்பாடு படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடந்த, 2014ல், 1.5 சதவீதம், 2019ல், 5 சதவீதம், 2022ல், 10 சதவீதம், 2024ல், 15 சதவீதம், 2026 ஏப்., 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, 2014ல் இருந்து தற்போது வரை, அனைத்து பெட்ரோல் வாகனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் இயங்கி கொண்டிருக்கிறது. ‘இ 20’ பெட்ரோல் இந்திய தரநிலைகளுக்கு உட்பட்டு முறையாக சோதிக்கப்பட்ட பாதுகாப்பான எரிபொருள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
