சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதி பதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பரிந்துரையை, கடந்த மாதம் 26ல், உச்ச நீதிமன்ற, ‘கொலீஜியம்’ வழங்கியிருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை உயர் நீதிமன்றத்தின், 55வது தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார்.

புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரிக்கு, என் நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், 1966ல் பிறந்த நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பல்கலையில் சட்டம் பயின்றார். 1992ல் வழக்கறிஞராக பதிவு செய்து, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார்.

பின், 2000 முதல் 2015ம் ஆண்டு வரை, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில், வழக்கறிஞராக பணியாற்றினார். அதை தொடர்ந்து, 2016ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2018ல் நிரந்தர நீதிபதியானார்.

அதன்பின், 2025ம் ஆண்டு ஏப்., மாதம், கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின், 55வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ.தர்மாதிகாரிக்கு, இன்று மதியம் 12:30 மணிக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதன்பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

Source link