சென்னை: உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக தாய்மொழி தினம்
ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்.21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இன்று முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழே நீ வாழ்ந்திடு, இன்று உலகத் தாய்மொழிகள் நாள். ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. கருணாநிதியின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
அவர்களுக்கு என் நன்றி. நம் தமிழைக் காத்து, அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகர் கமல்
மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி. அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம். மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.
