சென்னை: ஐந்து ஆண்டுகளில், 24 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், சம்பவம் செந்தில், சி.டி.மணி போன்ற ரவுடிகள் பதுங்கி இருக்கும் இடத்தை கூட, தமிழக போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை.
கடந்த, 1998 – 2026 வரை, ரவுடிகள், செயின் பறிப்பு கொள்ளையர்கள் என, 108 பேரை, ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா, திருச்சி ஜெகன், புதுக்கோட்டையில் துரை, திருநெல்வேலியில் நீராவி முருகன் என, 24 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், பெரும் தாதா போல உருவெடுத்துள்ள சி.டி.மணி, சம்பவம் செந்தில் போன்ற ரவுடிகளை, போலீசாரால் நெருங்க கூட முடியவில்லை.
இதுகுறித்து, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 1970களில், வட சென்னையில் சுப்பையா, பெஞ்சமின் ஆகிய இரு ரவுடி கும்பல்கள் பெரும் அட்டூழியம் செய்து வந்தன. அதன் பின்னர், அயோத்தி குப்பம் வீரமணி, வெள்ளை ரவி, சேரா, ஆசைத்தம்பி, கபிலன், காட்டான் சுப்பிரமணியன், கேட் ராஜேந்திரன் என, ரவுடிகள் உருவெடுத்தனர்.
இவர்களின் ஆட்டம் அதிகமானதால், அயோத்திகுப்பம் வீரமணி, வெள்ளை ரவி, பங்க் குமார் என, அடுத்தடுத்து என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதனால், ரவுடிகள் வசிக்கும் இடங்களில், ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டாலே, ரவுடிகள் வீடுகளை காலி செய்து விடுவர்.
தற்போதும், ரவுடிகளுக்கு எதிராக போலீசார் துப்பாக்கிகளை துாக்கியபோதிலும், குற்றங்களை குறைக்க முடியவில்லை. சாதாரண ரவுடிகளை என்கவுன்டர் செய்வதால், எவ்வித பலனும் அளிக்காது. ஆனால், நிழல் உலக தாதா போல உருவெடுத்துள்ள, சி.டி.மணி, சம்பவம் செந்தில் போன்ற ரவுடிகளை, போலீசாரால் நெருங்கவே முடியவில்லை.
இவர்கள், 15 – 23 வயதுள்ள சிறார்கள் மற்றும் வாலிபர்களை, கஞ்சா வியாபாரிகளாக மாற்றி விடுகின்றனர். அவர்களை சிறை வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி, ரவுடிகளாக மாற்றி வருகின்றனர்.
கொடூர குற்றங்களில் ஈடுபடும், ‘ஏ பிளஸ்’ ரவுடிகளான சி.டி.மணி, சம்பவம் செந்தில் போன்ற ரவுடிகளின் ஆட்டத்தை, போலீசார் முடிவுக்கு கொண்டு வராத வரை, குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
