சென்னை: ஒருவேளை சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி கிடைத்து விட்டாலும், திமுகவை உடைக்க பாஜ முயற்சிக்கும் என்று ஆங்கில தொலைக்காட்சி நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கேள்வி; இரட்டை இலக்க தொகுதி எண்ணிக்கை, ஒரு ராஜ்யசபா சீட் கேட்ட விசிகவுக்கு, திமுக 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறதா?
பதில்; நாங்கள் 10 தொகுதிகளை எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தேமுதிக மற்றும் பல சிறிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்ததால், அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டியதாயிற்று. அதேவேளையில், கூட்டணியை தொடர வேண்டும் என்பதற்காக, இடதுசாரிகள், மதிமுக, இந்திய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை குறைத்துக் கொண்டன. இந்த சூழலில் திமுக எங்களுக்கு கூடுதல் சீட்களை வழங்க முன்வந்தது. ஆரம்பத்தில் 7 தருவதாக சொன்னார்கள். நாங்கள் 8 கேட்டோம். பேச்சுவார்த்தையை நீண்டகாலம் இழுத்தடிக்க விரும்பாமல் 8 இடங்களுக்கு ஒப்புக்கொண்டோம்.
கேள்வி: நீங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்ததா?
பதில்; ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகள் கிடைக்காது. பல கட்சிகள் ஒரே தொகுதியை கேட்கும். ஆனால், அனைவருக்கும் அதைக் கொடுக்க முடியாது. யாராவது ஒருத்தருக்கு மட்டுமே கொடுக்க முடியும். காட்டுமன்னார்கோவில், செய்யூர் மற்றும் திருப்போரூர் ஆகிய 3 தொகுதிகளை முதலில் கேட்டு பெற்று விட்டோம். நாகை தொகுதி ஜவாஹிருல்லாவுக்கு ஏற்கனவே ஒதுக்கியது எங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எங்களுக்கு அரக்கோணம் கிடைத்தது. நாங்கள் வானூர் கேட்டோம். ஆனால், அது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி கிடைத்தது. தென்மாவட்டத்தில் இரு தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், அவர்கள் பெரியகுளம் மட்டும் கொடுத்தனர்.
கேள்வி; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக நீங்கள் அறிவித்த போது, தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று கூறினீர்களே? எந்த மாதிரியான மாற்றம் நிகழும்?
பதில்; 2021ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினேன். பார்லிமென்ட்டுக்கு சென்றது கவுரவம் தான். இருப்பினும், தமிழக அரசியலைப் பார்க்கும்போது, பிராந்தியக் கட்சிகளைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பாஜவின் உத்தி கவலைக்குரியதாக உள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பிரதமர் குறிப்பிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு, கட்சிகளின் வாக்குச் சதவீதங்கள் தெரியவரும். கூட்டணிகள் மாறக்கூடும். மற்ற மாநிலங்களில் செய்தது போலவே, திமுக பெரும்பான்மை பெற்றாலும் கூட, கட்சிகளை உடைத்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜ முயற்சிக்கலாம். இதுபோன்ற சூழலில் தமிழக அரசியலை விட்டு நான் விலகி இருக்கக் கூடாது.
கேள்வி; உங்கள் கட்சியின் தற்போதைய 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது ஏன்?
பதில்; 8 தொகுதிகள் தான் உள்ளன. சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். 370 பேர் என்னை போட்டியிட விருப்பமனு கொடுத்தனர். ஒருவேளை எங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தால், தற்போதைய 3 எம்எல்ஏக்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்போம்.
ஆனால், கட்சியினர் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஜனநாயக முறைப்படி புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மற்றபடி, எம்எல்ஏக்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளோ, ஒழுங்கு நடவடிக்கையோ இல்லை. ஜாதி, முன்னூரிமை மற்றும் பெண்கள் ஆகியவை பரிசீலித்து வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டது.
கேள்வி; சில ஜாதி அல்லது வலதுசாரி கட்சிகள் திமுக கூட்டணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இக்கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கருத்தியல் ரீதியான எதிர்ப்பு என்று இன்னும் நம்புகிறீர்களா?
பதில்; ஒன்று அல்லது இரண்டு அத்தகைய கட்சிகளைச் சேர்ப்பது கூட்டணியின் கருத்தியல் அடையாளத்தைச் சிதைத்துவிடாது. இடதுசாரி கட்சிகளும், மற்றவர்களும் வலதுசாரி அரசியலைத் தீவிரமாக எதிர்க்கின்றனர். இந்தக் கூட்டணியில் அவர்கள் இணைந்திருப்பதன் மூலம் வலதுசாரிக் கொள்கையில் வலுவாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
கேள்வி: திமுக ஆட்சியில் நடக்கும் ஜாதி வன்கொடுமைகள் மற்றும் லாக்-அப் மரணங்கள் குறித்து விசிக போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்; ஒரு அரசால் ஐந்தாண்டுகளில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது. அதிகாரிகள் தங்கள் சொந்த மனநிலைப்படியே செயல்படுகிறார்கள். நாங்கள் போராட்டங்களை நடத்தியுள்ளோம், ஆயிரக்கணக்கானோரைத் திரட்டியுள்ளோம். அதிகாரிகளைச் சந்தித்துள்ளோம். நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளோம்.
ஆனால் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தீர்வுகளுக்கு அதிக அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. ஜாதி மற்றும் மதம் சார்ந்த கட்டமைப்புகள் இன்னும் மாறாமல் இருக்கின்றன. ஓர் அதிகாரிக்குத் தலித் விரோத மனப்போக்கு இருந்தாலோ அல்லது முஸ்லிம்கள் மீது வெறுப்பு இருந்தாலோ, எதுவும் மாறாது. ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதற்கு திமுக நேர்மறையாகப் பதிலளித்துள்ளது.
கேள்வி: பாஜவிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையிலும், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நடிகர் விஜய்யின் முடிவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்; அவரது முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் அது மட்டுமே அவர் பாஜவை எதிர்க்கிறார் என்று அர்த்தமாகாது. அவர் பாஜவை நேரடியாக விமர்சிக்கவில்லை. அவரது நிலைப்பாடு தற்காலிகமானது, ஒருவேளை தனது பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இருக்கலாம்.
கேள்வி; ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, திரு.வி.க. நகரில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அது பற்றி உங்களின் கருத்து?
பதில்; அவருக்குப் பாதுகாப்புத் தேவை. அவர் துணிச்சலாகப் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு அரசியலில் ஒரு களம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை அதிமுக அவருக்கு வழங்கியுள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
