சென்னை: ‘கட்சியில் மாவட்ட செயலர்கள் நியமனம் முடிந்து விட்டது. அதை மனமுவந்து நிர்வாகிகள் ஏற்க வேண்டும்’ என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள், மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. மாவட்டம், மண்டலம், மாநில நிர்வாகத்துக்கு அவ்வப்போது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. அதனால், சில நாட்களில், மாவட்ட நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் அறிவித்தாக வேண்டும்.
ஓய்வு, உறக்கமன்றி, பல்வேறு சுமைகளுக்கு இடையே, இந்த பணிகளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது.
தினமும் 15 மணி நேரம், பொது மக்கள், நிர்வாகிகளை சந்திப்பதிலேயே செலவாகிறது. எனவே, என்னை நேரில் வந்து சந்தித்து, நெருக்கடி தருவதை, நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்.
அறிவிக்கும் பொறுப்புகளை மனமுவந்து ஏற்று, பணியாற்ற வேண்டும். அதில், மாற்றம் செய்வதாக இருந்தால், தேர்தலுக்கு பின், ஆற, அமர, பேசி முடிவு செய்வோம்.
தமிழகம் முழுதும், 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலர்கள் அறிவிப்பு முடிந்து விட்டது. அதில், மாற்றம் ஏதுமில்லை; அதுவே இறுதியானது.
காரைக்குடி மாவட்ட செயலர் தேன்மொழி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலராகவும், திண்டிவனம் மாவட்ட செயலர் நாகராஜன், மண்டல துணை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இருவரையும் அந்த பொறுப்பிலிருந்து விடுவித்ததற்கு, நானே முழு பொறுப்பேற்கிறேன். அவர்கள் இருவரும் எனக்காக இதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
