சென்னை: ”காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை தயார் செய்த பின், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்துவோம்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: இந்திய வரலாற்றில் முதல்முறையாக காஸ் சிலிண்டர் விலை 2 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 60 ரூபாயும், வர்த்தக சிலிண்டர் விலை 114 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனால், சமானிய மக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் அல்லது மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என, சொல்வதற்கு கூட, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு மனமில்லை. ஒட்டுமொத்த மக்களின் கழுத்தை நெரிக்கும் இந்தப் பிரச்னை குறித்து கூட குரல் கொடுக்க முடியாமல், அவர் மவுனமாக இருக்க காரணம் என்ன?
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட உள்ள விருப்ப தொகுதிகள் பட்டியலை தயார் செய்து வருகிறோம். அந்தப் பட்டியல் முழுமை பெற்றதும், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்துவோம். சட்டசபை தேர்தலில் காங்.,கின் சாதாரண தொண்டர்களும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
