சென்னை: காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதை கண்டித்து, போராட்டம் நடத்தியதாக, சீமான், முன்னாள் எம்.எல்.ஏ., நிஜாமுதீன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் அமைந்துள்ளது மார்க் துறைமுகம். இங்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் இருந்து வரும் துகள்கள், நாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதை கண்டித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், 2018ம் ஆண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து, சீமான், நாகை முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் ஆகியோர் மீது, நாகூர் போலீசார், தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிஜாமுதீன் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகளுக்கு பின், போலீசார் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இதற்கு அரசிடமும் உரிய அனுமதி பெறவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று, நிஜாமுதீன், சீமான் உள்ளிட்டோர் மீது, நாகை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
