சென்னை: ''காவல் துறை, சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில், 'ஆன்லைன்' வாயிலான, 'டிஜிட்டல்

சென்னை: ”காவல் துறை, சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில், ‘ஆன்லைன்’ வாயிலான, ‘டிஜிட்டல் கைது’ என்ற நடைமுறையே இல்லாத நிலையில், மக்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழப்பது வேதனை அளிக்கிறது,” என, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., பாலு சுவாமிநாதன் வேதனை தெரிவித்தார்.

டிஜிட்டல் கைது

சென்னை ராயப்பேட்டையில், ‘சைபர் சொசைட்டி இந்தியா’ அமைப்பு சார்பில், ‘இணையத்தில் பயணம் இனிமையா, கொடுமையா’ என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் செந்துார் பாரி, நடிகை ரேகா நாயர், ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., பாலு சுவாமிநாதன் பேசியதாவது:

‘ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது இணையத்திலே’ என்பது போல உள்ளது, ‘டிஜிட்டல்’ உலகம். வாழ்வின் மிக முக்கியமான அங்கமாகி விட்ட டிஜிட்டல் சாதனங்கள், நம் கட்டிப்பாட்டில் இருக்கும் வரை, பிரச்னைகள் இல்லை.

அதற்கு நாம் அடிமையாக, அது நம்மை ஆட்டிப்படைக்க துவங்கினால், பணம், புகழ் எல்லாம் இழந்து, நிம்மதி பறிபோய் விடும். தற்போது நாடு முழுதும், ‘டிஜிட்டல் கைது’ என்ற மோசடி அதிகரித்து வருகிறது.

காவல் துறை, சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில், ‘டிஜிட்டல் கைது’ என்ற நடைமுறையே இல்லாத போது, விழிப்புணர்வு இல்லாமல், குற்றமே செய்யாத நிலையில், மக்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருவது வேதனை அளிக்கிறது.

மக்களிடம் இருக்கும் பயம், பேராசையை, சைபர் குற்றவாளிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும், சைபர் குற்றங்களை எப்படி அணுக வேண்டும் என்பது காவல்துறை, நீதித்துறையில் இருப்பவர்களுக்கு கூட தெரியவில்லை. ஒரு தகவலை பார்வேர்டு செய்தவர்களை கூட குற்றவாளிகளாக கருதுகின்றனர்.

விழிப்புணர்வு

அது முற்றிலும் தவறு. இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு கணினிக்கும், ஒரு ஐ.பி., முகவரி தரப்படுகிறது. அது குறித்த விழிப்புணர்வு கூட, விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தெரிவது இல்லை.

சைபர் குற்றங்கள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்களை விட, அதனை தடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய நீதித்துறையினருக்கு தான், தற்போது விழிப்புணர்வு அதிகம் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

Source link