சென்னை: 'குடிநீர் பாட்டில்களிலும், 'மைக்ரோ பிளாஸ்டிக்' துகள்கள் கலந்திருப்பது, கண்டறியப்பட்டு உள்ளது'

சென்னை: ‘குடிநீர் பாட்டில்களிலும், ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ துகள்கள் கலந்திருப்பது, கண்டறியப்பட்டு உள்ளது’ என, மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில், வழக்கறிஞர் வே.சந்திரசேகரன் ஆஜராகி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில், குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள், ஆய்வு செய்யப்பட்டன.

இதில், மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பொதிந்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும், மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டு உள்ளது.

பாக்கெட்டுகளில் பொதிந்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையை உண்ணுவதால், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து, கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. ஆய்வுகள் விரைவில் முடிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை பார்வையிட்ட நீதிபதிகள், ‘குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய, குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Source link