சென்னை: ‘குரூப் – 2, 2ஏ’ தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடி தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தயங்குவது ஏன் என, கடந்த ஞாயிறன்று, தேர்வு மையம் தெரியாமல் சுற்றித் திரிந்த தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழக அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என, பல்வேறு குரூப் – 2, 2ஏ பணிகளில், 828 காலி பணியிடங்கள் உள்ளன; இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 15ல் வெளியிடப்பட்டது.
முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்., 28ல் நடந்தது. அதன் முடிவுகள், டிச., 22ல் வெளியாகின. அவற்றில், குரூப் – 2 முதன்மை தேர்வுக்கு 1,126 பேர்; குரூப் – 2ஏ தேர்வுக்கு 9,457 பேர் தகுதி பெற்றனர்.
இவர்களுக்கான முதன்மை தேர்வுகள், தமிழகம் முழுதும் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தன. காலையில் குரூப் – 2ஏ பொது அறிவு தேர்வும்; மதியம் குரூப் – 2, 2ஏ தமிழ்
தொடர்ச்சி 17ம் பக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 2…
3ம் பக்கத் தொடர்ச்சி
தகுதித் தேர்வும் நடப்பதாக இருந்தன. ஆனால், சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது.
போராட்டம்
தேர்வு மைய விபரங்கள், ஹால் டிக்கெட்டில் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இதை கண்டித்து, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தேர்வர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் நேரில் வந்து பேச்சு நடத்தினார். தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறி, தமிழகம் முழுதும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இருப்பினும், சென்னை தவிர பிற மாவட்டங்களில் குரூப் – 2, 2ஏ முதன்மை தேர்வுகள் துவங்கின. இதனால், டி.என்.பி.எஸ்.சி., வரலாற்றிலேயே, தேர்வு நடந்து கொண்டிருந்த போதே, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்ட நிகழ்வு அன்றைய தினம் அரங்கேறியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக வெங்கடபிரியா நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அது உண்மை அல்ல என்பதும், அரசு வட்டாரத்தில் திட்டமிட்டு கசிய விடப்பட்ட தகவல் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், குளறுபடி நடந்து இன்றுடன் ஆறு நாட்களாகிறது. இதுவரை, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வெளிவரும் அறிக்கைகள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் பெயரிலேயே வெளிவருகின்றன. கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கண்டுக்கவில்லை இது குறித்து, போட்டித் தேர்வர்கள் கூறியதாவது:
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த, எந்தவித குழுக்களையும் அரசு அறிவிக்கவில்லை. பள்ளி பொதுத் தேர்வுகளில் தவறுகள் நடக்கும் போது, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு பணிக்கான தேர்வில் நடந்த இந்த குளறுபடியை, அரசு கண்டும் காணாமல் கடந்து செல்வது ஏன் என்பது தான் தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
