சென்னை: கொலை வழக்கில், 17 வயதான சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து

சென்னை: கொலை வழக்கில், 17 வயதான சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறையில், கடந்த 2022ம் ஆண்டு ஆக., 17ல் முன்விரோதத்தில், வன்னியர் சங்க நகர தலைவர் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில், ஒன்பது பேருக்கு, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, கடந்த ஆண்டு அக்., 31ல் தீர்ப்பளித்தது; மீதமுள்ள 12 பேரை விடுதலை செய்தது. வழக்கு விசாரணையில் ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார் என்பவர், 2024ல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கண்ணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, 17 வயதான சிறுவன் மீதான வழக்கை, சிறார் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு பதில், மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில், வயது வந்த குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் விசாரிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறுவனை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கும்படி, நாகை நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி இல்லாததால், அவர் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் மகன் மீதான வழக்கை, அமர்வு நீதிமன்றத்தில் விசாரித்ததும், சாதாரண சிறையில் அடைத்ததும் தவறு என கூறி, அவரது தாய் சவீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் பி.முத்தமிழ் செல்வகுமார் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்த ரவு:

சம்பவம் நடந்த போது, 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் மீதான வழக்கை, குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிரான வழக்குடன் இணைத்து விசாரித்தது, சிறார் நீதி சட்டப்படி தவறு.

அது மட்டுமின்றி, தண்டனை விதிக்கப்பட்ட பின், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்காமல், சாதாரண சிறையில் அடைத்ததும் சட்டப்படி தவறு. எனவே, சிறுவனை குற்றவாளி என அறிவித்து, தண்டனை விதித்த, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

சிறுவன் மீதான வழக்கு, மயிலாடுதுறை சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்காமல், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 9 முதல் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தவறு. எனவே, சிறுவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குகிறோம். மேலும், சட்டவிரோதமாக கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் இ.வி.சந்துருவை பாராட்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link