சென்னை கொளத்துார் தொகுதியில், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நிறுத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
கடந்த 2011 முதல், சென்னை கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் போட்டியிட்டு வருகிறார். கடந்த தேர்தல்களில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஜே.சி.டி.பிரபாகர், ஆதிராஜாராம் ஆகியோர், அ.தி.மு.க., சார்பில் எதிர்த்து நின்றனர். நான்காவது முறையாகவும், கொளத்துாரில் ஸ்டாலின் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இம்முறை, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடியை நிறுத்த, பழனிசாமி ஆலோசித்து வருவதாக அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 2006ல், சென்னை மாநகராட்சித் தேர்தலில் கொளத்துார் தொகுதிக்குட்பட்ட வார்டில் போட்டியிட்டு, கவுன்சிலர் ஆனவர் ஆம்ஸ்ட்ராங்.
அதன்பின், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராகி, பட்டியலின மக்களை ஒருங்கிணைத்து வந்தார். கொளத்துார் வட்டாரத்தில் பட்டியலின மக்களிடம், அவருக்கு செல்வாக்கு அதிகம். 2024 ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை, அவரது மனைவி பொற்கொடி துவக்கி, கணவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி வருகிறார். இதனால், ஸ்டாலினுக்கு அவர் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என பழனிசாமி நம்புகிறார். மேலும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கருதுகிறார்.
