சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்கள் 10 பேரில், ஆறு பேர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க., நிறுவனரான விஜயகாந்த், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் வெளிப்படுத்தியதே கிடையாது. தன்னை தமிழர் என அடையாளப்படுத்திக் கொண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்தார். தமிழ் தவிர, வேறு மொழி படங்களில் நடிக்க மறுத்து விட்டார்.
இதனால், தே.மு.தி.க.,வில் அனைத்து சமூகத்தினரும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களும் இணைந்து பணியாற்றினர்.
விஜயகாந்த் மறைவுக்கு பின், தே.மு.தி.க.,வில் ஜாதி ரீதியான அரசியலை, பிரேமலதா, அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோர் முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2024 லோக்சபா தேர்தலில், நாயுடு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் விருதுநகர் தொகுதியில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.
தற்போது, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த நிலையில், தன் கட்சிக்கு வழங்கிய ஒரு ராஜ்யசபா ‘சீட்’டை, தன் சகோதரர் சுதீஷுக்கு பிரேமலதா வழங்கி விட்டார்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பிரேமலதா வெளியிட்டார்.
அதிலும், விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகரன் உட்பட ஆறு வேட்பாளர்கள் நாயுடு சமூகத்தினர் என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க., அமைச்சர்களான வேலு, சேகர்பாபு ஆகியோர் வாயிலாகவே கூட்டணிக்குள் நுழைந்து, அதிக தொகுதிகளையும் பெற்ற பிரேமலதா, தற்போது நாயுடு சமூகத்தினருக்கு 60 சதவீதம் அளவுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது, தே.மு.தி.க.,வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
