சென்னை: சட்டசபை தேர்தலில் அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மொத்தம் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அதில் இடம்பெற்று இருந்தனர். பல முக்கிய அமைச்சர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ், அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் காந்தி ‘ பாவம் செய்தவர்களுக்கு தான் ஆண் குழந்தை பிறக்கும்’ என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் திமுக பொதுக்கூட்டம் ஒன்றிலும் தகாத வார்த்தையிலும் பேசிய வீடியோ வெளியாகி இருந்தது.
அமைச்சர் காந்தியின் மனைவி ராணிப்பேட்டையில்உள்ள லேடீஸ் கிளப் இடத்தை ஆக்கிரமித்து மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி நடத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. அவரின் செயல்பாடுகளால் வருத்தமடைந்த முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் அவரை கடிந்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
மனோ தங்கராஜூம் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி உள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக பேசி பலரின் கண்டனத்துக்கு உள்ளானார். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு வந்தார். இடையில் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிறகு மீண்டும் வழங்கப்பட்டது. சமீபத்தில் விமான நிலைய ஓய்வறையில் மதுபானம் அருந்தும் வீடியோ வெளியாகி இருந்தது.
அமைச்சர் காந்திக்கு பதில், அவரது மகன் வினோத், ராணிப்பேட்டையில் களமிறங்குகிறார். அதேபோல், முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்த முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதில், கவுதம சிகாமணி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தாராபுரத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திராணி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
