சென்னை: ''சமத்துவ மக்கள் கட்சியை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை; பா.ஜ.,வில் பதவி வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம்

சென்னை: ”சமத்துவ மக்கள் கட்சியை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை; பா.ஜ.,வில் பதவி வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது,” என, நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

நடிகர் சரத்குமார், தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, 2024ல் பா.ஜ.,வுடன் இணைத்தார்.

அவரின் மனைவியும் நடிகையுமான ராதிகா, அந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ள சரத்குமார், தேசிய அளவில் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில் அவர், சென்னை தி.நகரில் நேற்று, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், சரத்குமார் அளித்த பேட்டி:

என்னுடன் 30 ஆண்டுகள் பயணித்தவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்று ஆதங்கம் இருந்தது. என் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனையில், மறுபடியும் சமத்துவ மக்கள் கட்சி துவக்க வேண்டும் என்பதை பதிவு செய்தனர்.

பிரதமர் மோடி மீது உள்ள விருப்பத்தால் தான், பா.ஜ.,வில் நான் இணைந்தேன். அவர், குஜராத் முதல்வராக மூன்றாவது முறை இருந்தபோது, நான் பேட்டி எடுத்தேன். அன்று முதல், அவரின் நிர்வாக திறமை, நாட்டை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை காரணமாக, தேசிய உணர்வோடு, தேசிய நீரோட்டத்தில் செல்ல பா.ஜ.,வில் இணைந்தேன்.

இணையும்போது என்ன கூறினர் என்று அவர்களுக்கு தெரியும். இதுவரை எனக்கு பதவி வழங்கப்படவில்லை. பதவி இருந்தால் தான், செயல்பட முடியும். இதை கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டேன்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் உட்பட அனைவரிடமும் பேசி இருக்கிறேன். இந்த தேர்தலில், நானும் என் மனைவியும் போட்டியிட மாட்டோம்.

மாநில தலைவருக்கும் தேசிய தலைமைக்கும், ‘ஒரு பதவி இருந்தால் தான் என்னால் செயல்பட முடியும்’ என்று கடிதம் வழங்க உள்ளேன்.

த.வெ.க., தலைவர் விஜய், ஒரு தலைவரே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்திப்பாரா கோயல்?

சரத்குமார் தன் ஆதரவாளர்களுடன் சென்னை யில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். ‘அதில், பா.ஜ., மேலிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் துவக்க வேண்டும்’ என, ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு பதிலளித்து பேசிய சரத்குமார், ‘திருச்சியில் நடந்த பிரதமர் கூட்டத்தில், என் போட்டோ இடம்பெறவில்லை. எனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என கூறியிருக்கிறார். இன்று சென்னை வரும் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்து, இப்பிரச்னைகள் குறித்து பேச சரத்குமார் திட்டமிட்டுள்ளார்; அதற்காக கோயலை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

Source link